ராகுல் காந்திக்கு சிறை தண்டனை, தகுதி நீக்க விவகாரம்; ‘மோடி’ குடும்பப் பெயர் வழக்கின் 4 கதாபாத்திரங்கள் யார்?.. பாஜக எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர், நீதிபதி வரை தகவல்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மோடி குடும்ப பெயர் அவதூறு வழக்கின் 4 கதாபாத்திரங்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயரான ‘மோடி’ என்ற பெயருடன் பணமோசடி செய்து வௌிநாடு தப்பியோடிய ெதாழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவுற்று தற்போது ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி, ராகுல் காந்தியின் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்தது.

மோடி குடும்பப் பெயர் குறித்து ராகுல் காந்தி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவர் தனது எம்பி பதவியை இழந்த நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. காரணம் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது அவதூறு கருத்துகளை தெரிவிப்பதும், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்வதும் வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், ராகுல்காந்தி விஷயத்தில் வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கும், இந்த வழக்கிற்கும் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, இந்த வழக்கின் பின்னணியில் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன.

முதலாவதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகுல்காந்தி, ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் மோடி, சூரத் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சி.ஜே.எம் ஹரீஷ் ஹஸ்முக் பாய் வர்மா, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரித் பன்வாலா ஆகியோர் ஆவர். முதலாவதாக ராகுல்காந்தியை பொருத்தமட்டில், நாட்டின் மிகப்பெரிய பாரம்பரிய பின்னணி கொண்ட தேசிய கட்சியான காங்கிரசின் அரசியல் பின்னணி கொண்டவர். கடந்த 1970ம் ஆண்டு பிறந்த அவர், கடந்த 2003ம் ஆண்டு வரை நேரடி அரசியலில் இறங்கவில்லை. ஆனால் 2004ம் ஆண்டு மார்ச்சில் நடந்த அமேதி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தனது நேரடி அரசியலில் கால்பதித்தார். அமேதியில் வெற்றிபெற்று பதினைந்தாவது மக்களவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்றைய தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்ததால், 2009ல் மனிதவள மேம்பாட்டு நிலைக்குழுவின் உறுப்பினராக  ராகுல்காந்தி நியமிக்கப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் துணைத்  தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2009ல் மீண்டும் மக்களவைக்கு  தேர்ந்தெடுக்க ராகுல், வெளியுறவு மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான  நிலை குழுவின் உறுப்பினராகவும், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான  நிலைக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2013ல் காங்கிரஸ்  தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2014ல் நடந்த தேர்தலில்  அமேதியில் போட்டியிட்டு தோற்றார். மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாடு  தொகுதியிலும் போட்டியிட்டதால், அந்த தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம்  சென்றார். கடந்த 2019ம் ஆண்டு காங்கிரசின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றாலும் கூட, கடந்த 2013ம் ஆண்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, சிறை தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை உடனடியாக தகுதிநீக்கம் செய்வதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்ட நகலை கிழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது இந்த நடவடிக்கை தற்போது அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான ஆயுதமாக மாறிவிட்டது. இல்லாவிட்டால், தற்போது ராகுல் காந்தி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகள் தடைபட்டிருக்கும். தற்போதைய நிகழ்வுகளின் மூலம் ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றும் ஹரீஷ் ஹஸ்முக் பாய் வர்மா, வதோதராவில் வசித்து வருகிறார். மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்த அவர், 2008ம் ஆண்டில் நீதித்துறை சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று நீதித்துறை நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதியின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஹரீஷ் ஹஸ்முக் பாய் வர்மா, வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்த முடியாத பலருக்கும் மாவட்ட சட்ட உதவி மையம் மூலம் உதவிகளை செய்து வருகிறார். ராகுல் காந்தி வழக்கின் மனுதாரரான பூர்ணேஷ் மோடி, சூரத்தின் அடாஜன் பகுதியில் வசித்து வருகிறார். குஜராத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் (2013-17) வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின் போதும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கிரித் பன்வாலா ஆஜரானார். பிரபல குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவரான இவர், கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 1,600 வழக்குகளில் ஆஜாராகி உள்ளார். தனது நீதித்துறை அனுபவத்தின் அடிப்படையில், ‘அஸ்டோ மஹிதி’ என்ற புத்தகத்தையும், ‘சிலை’ என்ற பெயரில் குற்றப் பின்னணி கதையையும் எழுதியுள்ளார். ‘நர்மதா தாரா வாஹி ஜடா பானி’ என்ற குஜராத்தி மொழி திரைப் படத்தையும் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் 10 வெவ்வேறு விருதுகளை வென்றுள்ளது. இவ்வாறாக ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் இன்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து வடமாநில ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

4 ஆண்டுகள் நடந்தது என்ன?

* கடந்த 2019 ஏப்ரல் 16ம் தேதி பூர்னேஷ் மோடி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.

* ெதாடர்ந்து அதே ஆண்டு ஜூன் 24ம் தேதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

* கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி புகார்தாரரான பூர்னேஷ் மோடி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரப்பட்டது.

* கடந்தாண்டு பிப்ரவரி 16ம் தேதி புகார்தாரரான பூர்னேஷ் மோடி, திடீரென உயர்நீதிமன்றத்தில் தடைகோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்.

* குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் துரிதமாக விசாரணை நடத்தப்பட்டது.

* இந்தாண்டு மார்ச்சில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவுற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

* கடந்த 17ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தனிப்பட்ட பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

Related Stories: