பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் செல்லும் ஒரு நாள் கீழடி அருங்காட்சியகம் கல்வி சுற்றுலா: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்: பொதுமக்களும் 300 கட்டணத்தில் செல்ல ஏற்பாடு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து முதல்முறையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஒருநாள் கீழடி அருங்காட்சியத்திற்கு கல்வி சுற்றுலா மற்றும் பொதுமக்களுக்கான கீழடி அருங்காட்சியம் செல்லும் ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் நேற்று துவக்கி வைத்தார்.கலெக்டர் கூறுகையில், சிவகங்கை கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலக தமிழர்கள் கண்டு களிக்கும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் 31 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் ரூ.18.43 கோடியில் கீழடி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளகத்தில் 2018 முதல் தொடர்ந்து 5 கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு.6ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரை நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தி உள்ளது. கீழடி அகழாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் குவிரன், ஆதன் உள்ளிட்ட தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலக்கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமுதாயம் வேளாண்மை மூலம் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டனர். மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிந்தனர் என்பதும் அகழாய்வில் மூலம் அறியப்படுகிறது.

மகாராஷ்டிரம், குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகிற மூலக்கற்களை கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் வணிக தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது. கங்கை சமவெளியை சார்ந்த கி.மு.5ம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக்காசுகள், கிடைப்பதன் மூலம் கங்கை சமவெளியுடன் வணிக பரிமாற்றம் நடந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு சான்றாக ரோம் நாட்டு நாணயங்களும், ரோம் நாட் டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் வகை பானை ஓடுகளும் உறுதி சேர்க்கின்றன. அருங்காட்சியகத்தில், அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக்குழிகள், செங்கற் கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. குழந்தைகளும், மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொடுதிரையில் தங்களது பெயரை எழுதினால், தமிழி எழுத்தில் பெயரை கண்டு களிக்கலாம். சிவகங்கையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் கீழடி அருங்காட்சியகம் கல்வி சுற்றுலா, பொதுமக்களும் சுற்றுலா பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவில் 100 கல்லூரி மாணவர்கள், 100 பள்ளி மாணவர்கள், 50 பொதுமக்கள் என 250 பேர் பங்கேற்றுள்ளனர். சுற்றுலாவில் கீழடி அருங்காட்சியகம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான சுற்றுலாத்துறை மூலம் குறைந்த கட்டணமாக ரூ.300 கட்டணத்தில் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றுலா மூலம் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கீழடி சுற்றுலா செல்ல விருப்பமுள்ள பொதுமக்கள் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலரை 7397715688 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களுக்கான ஒரு நாள் சுற்றுலா ரூ.300 கட்டணத்தில் காலை புறப்பட்டு கீழடி அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டு திரும்பி வர மதிய உணவுடன் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, சுற்றுலா அலுவலர் அன்பரசன் பங்கேற்றனர்.

Related Stories: