கோடை விடுமுறை நெருங்குவதால், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பியது: சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

சேலம்: கோடை விடுமுறை நெருங்கியுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால், கோடை சிறப்பு ரயில்களை அறிவிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுகிறது. இவ்விடுமுறையையொட்டி நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களது சொந்த கிராமங்களுக்கு விடுமுறை கொண்டாட்டத்திற்காக புறப்பட்டுச் செல்கின்றனர். இதற்காக ரயில் போக்குவரத்தை விரும்பி, பயணம் மேற்கொள்கின்றனர். நடப்பாண்டு கோடை விடுமுறை நெருங்கியுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் புக்கிங் வேகமெடுத்துள்ளது. அதிலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இம்மாத இறுதியிலேயே விடுமுறை விடப்படுவதால், பலரும் பல்வேறு பயணங்களை திட்டமிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவில் தீவிரம் காட்டியுள்ளனர். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. அதேபோல், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் 15-20ம் தேதிக்குள் முடிந்துவிடும். அதனால், அதன்பின் கோடை விடுமுறை ஒரு மாத காலத்திற்கு மேல் விடப்படவுள்ளது. இதைக்கணக்கிட்டு நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்கின்றனர்.

குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், ஈரோடு வழியே கோவை மற்றும் கேரளா செல்லும் ரயில்களிலும், சென்னை-மதுரை-நாகர்கோவில் ரயில்களிலும், சென்னை-திருச்சி -திருநெல்வேலி ரயில்களிலும், கோவை-நாகர்கோவில் ரயில்களிலும் இம்மாத கடைசியில் இருந்து மே 10ம் தேதி வரையுள்ள நாட்களுக்கு இடமில்லை. முக்கிய ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. ஒரு சில ரயில்களில் மட்டும் மூன்றடுக்கு ஏசி, இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் இடம் உள்ளது. மற்றபடி இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அதேபோல், கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்களிலும் இருக்கைகள் காலியாக இல்லை. சேலம் மார்க்கத்தில் சென்னை-கோவை இடையே இயங்கும் கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் மே 10ம் தேதி வரையில் உள்ள நாட்களில் பெரும்பாலான நாட்களுக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் இடமில்லை.

கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு பலரும் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டதால், தற்போது சிறப்பு ரயில்களை எதிர்நோக்கி பயணிகள் இருக்கின்றனர். அதனால், சென்னை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து முக்கிய வழித்தடங்களில் கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கோடை காலத்தில் தமிழகத்திற்கு அதிகபடியான மக்கள் வருவார்கள். அவர்களின் பயன்பாட்டிற்காக கோடை சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரியுள்ளனர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோடை விடுமுறையையொட்டி முக்கிய ரயில்கள் நிரம்பி வருகிறது. அதனால், கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அதனால், விரைவில் கோடை சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியாகும்,’’ என்றனர்.

Related Stories: