காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்

கோவை: கோவையில் காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்தவர் ரங்கநாதன் (42). இவர், மாத வாடகைக்கு வாகனங்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த யசோதா தேவி (32) என்பவரை சந்தித்து, தனது காரை ஓராண்டுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் வாடகைக்கு விட ஒப்பந்தம் போட்டு கொண்டனர். முதல் 2 மாதம் வாடகை பணம் கிடைத்துள்ளது. 3வது மாதம் வாடகை வராததால் யாசோதாதேவியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கோவை சரவணம்பட்டிக்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து ரங்கநாதன் புகாரின்படி கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், யசோதா தேவி பலரிடம் மாத வாடகைக்கு காரை ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சின்னமேட்டுப்பாளையத்தில் பதுங்கியிருந்த யசோதா தேவியை கடந்த 23ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், கணினி உள்ளிட்ட 105 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர் 20 கார்கள் வரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பெற்று, வேறு நபர்களிடம் அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 7 கார்கள் கைப்பற்றப்பட்டன. மீதமுள்ள 13 கார்களை கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: