தமிழகத்தை விட்டு என்எல்சி வெளியேற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

நெய்வேலி: என்எல்சி நிறுவனம், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி பேசினார். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை தடுத்தல் மற்றும் நிலக்கரி சுரங்க விரிவாக்கம், புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க செய்தல் குறித்து விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், வணிகர்கள், மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் ஆலோசனை கூட்டம், நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.  

பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து வரும் வளர்ச்சி தமிழக மக்களுக்கு தேவை இல்லை. மொத்தத்தில் 91 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்எல்சி கையகப்படுத்த உள்ளது. இதற்காக வீராணம் பகுதியில் 200 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து சோதனை செய்து வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் என்பது 8 அடியில் இருந்து ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. சில இடங்களில் 1200 அடி வரைக்கும் சென்றுவிட்டது. இது ஏதோ 10, 15 கிராமங்களின் பிரச்னை என்று நினைக்கிறார்கள். சுற்றியுள்ள ஐந்து மாவட்ட பிரச்னை. இன்று இதை தடுத்து நிறுத்தாவிட்டால் 5 மாவட்டங்கள் பாதிக்கும். விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். என்எல்சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இதற்காக தமிழக அரசு ஒரு சென்ட் நிலத்தை கூட கையகப்படுத்த கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: