வேலை வாங்கி தருவதாக ரூ.37.5 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் வேலுமணி கார் டிரைவர் கைது

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.37.5 லட்சம் மோசடி செய்த மாஜி அதிமுக அமைச்சரின் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கார் டிரைவர் சுதாகரன். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, சேலம் மாவட்டத்தில் 9 பேரிடம் ரூ.37.5லட்சம் மோசடி செய்ததாகவும், இதற்காக போலி ஆணைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் மணியனூரைச் சேர்ந்த ஜோதி பிரகாஷ், தேன்மொழி, காசிவிஸ்வநாதன், சீனிவாசன், சுமதி உள்பட 9 பேர் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தனர்.

விசாரணை நடத்திய போலீசார், சுதாகரன் அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மாஜி அமைச்சர் வேலுமணியின் கார் டிரைவரான சுதாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மோசடி செய்த பணத்தில் நிலம் வாங்கி இருப்பது தெரியவந்தது. சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும், மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரித்தனர். இதையடுத்து சுதாகரனை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவரது மனைவி பிரபாவதியை தேடி வருகின்றனர்.

Related Stories: