திருமணம் செய்வதாக ஏமாற்றி மும்பை தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி: கோவை பள்ளி ஆசிரியையிடம் விசாரணை

கோவை: திருமணம் செய்வதாக ஏமாற்றி மும்பை தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த புகாரின்பேரில் கோவை பள்ளி ஆசிரியையிடம் விசாரணை நடக்கிறது. கோவை போத்தனூர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஹேசல் ஜேம்ஸ் (40). பள்ளி ஆசிரியை. இவருக்கும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ராஜேஷ் (44). என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராஜேஷ், செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது, ஆசிரியை தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி ராஜேஷூடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ராஜேஷின் தொடர் வற்புறுத்தலால் ஆசிரியை ஹேசல் ஜேம்ஸ், தனக்கு திருணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்றும், கணவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார். அதன்பின்னரும் இருவரது நட்பும் தொடர்ந்தது.

இந்நிலையில், ஹேசல் ஜேம்ஸ் எனது தந்தையுடன் வசித்து வருவதாகவும், பணம்  ரூ.90 ஆயிரம் கடனாக கேட்டார். இதனையடுத்து, ராஜேஷூம் இளம்பெண்ணுக்கு பணம் கொடுத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல மீண்டும் ராஜேஷை தொடர்பு கொண்ட இளம்பெண், சொந்தமாக தொழில் செய்ய போகிறேன் எனக்கூறி ராஜேஷிடம் ரூ.20 லட்சம் ரொக்கம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.

ஒருகட்டத்தில் ஹேசல் ஜேம்ஸ் நடவடிக்கையின் மீது ராஜேஷூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கண்காணிக்க தொடங்கினார். இதில், ஹேசல் ஜேம்ஸ் பல ஆண்களிடம் இதுபோல் பழகி வந்தது ராஜேஷூக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், இதுகுறித்து ஹேசல் ஜேம்சிடம் கேட்டுள்ளார். அதன்பின், ராஜேஷூடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். ராஜேஷ், தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தால் தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், கோவைக்கு வந்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ஹேசல் ஜேம்ஸ், அவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: