4வது மாடியிலிருந்து குதித்தார் சிபிஐ விசாரணையில் இருந்த குஜராத் அதிகாரி தற்கொலை

புதுடெல்லி: தொழிலதிபரிடம் லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட வௌிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வௌிநாட்டு வர்த்தக மையத்தின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜவ்ரி மால் பிஷ்னோய். இவர் உணவு கேன்களை ஏற்றுமதி செய்ய தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலதிபர் சிபிஐயிடம் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின்படி, தொழிலதிபர், பிஷ்னோய்-யிடம் ரூ.5 லட்சத்தை கொடுக்கும்போது, சிபிஐ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து 4வது மாடியில் உள்ள வௌிநாட்டு வர்த்தக மைய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை 9.45 மணியளவில், பிஷ்னோய் அலுவலக ஜன்னல் வழியே கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: