மோடி - அதானி தொடர்புகளை பேசியதால் தகுதி நீக்கம் சிறை செல்ல அஞ்ச மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேச பேட்டி

புதுடெல்லி: ‘‘நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் நாட்டின் ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவேன்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ‘எல்லா திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளது எப்படி?’ என பேசியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எம்பி பதவி பறிக்கப்பட்ட பின் முதல் முறையாக அவர் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் ராகுல் கூறியிருப்பதாவது: அதானி விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவதால் பாஜ அரசு பீதி அடைந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் அரசின் பீதியில் இருந்து மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்டதாகும். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் மோடி பயந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அவர் கண்ணில் அந்த பயத்தை நான் பார்த்தேன். அதனால்தான் நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சை அவர்கள் கேட்க விரும்பவில்லை.

ஆனாலும் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்று தொடர்ந்து நான் கேட்பேன். அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்தது யார் என்கிற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். பாஜ அரசை பொறுத்த வரையில் அதானிதான் நாடு, நாடுதான் அதானி என்றுள்ளது. எனது எம்பி பதவி மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என கேட்கிறீர்கள். அந்த நம்பிக்கையில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை. எனது எம்பி பதவி திரும்ப பெற்றாலும், இல்லாவிட்டாலும், நான் என் பணிகளை தொடர்ந்து செய்வேன். அவர்கள் என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நான் துவண்டு போக மாட்டேன். நான் நாடாளுமன்றத்தில் இருக்கிறேனோ இல்லையா என்பது முக்கியமில்லை. எங்கு இருந்தாலும் ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவேன்.

என்னை வாழ்நாள் முழுக்க தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைந்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மைக்காகவும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவேன். இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாம் முன்னோக்கி செல்லும் போது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். இந்த பேட்டியின் போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

* பெரிய ஆயுதத்தை கொடுத்துள்ளனர்

ராகுலின் தகுதி நீக்கத்தின் விளைவுகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘‘பிரதமர் மோடியின் பீதி அடைந்த இந்த எதிர்வினையால் எதிர்க்கட்சிகள் அதிகம் பயனடையும். உண்மை வெளிவரும் என்று அவர்கள் பீதி அடைந்துள்ளார். அதன் மூலம் மிகப்பெரிய ஆயுதத்தை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இப்போது மக்கள் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. அதானி ஊழல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவரை பிரதமர் மோடி காப்பாற்ற ஏன் துடிக்கிறார்? என்பதுதான் அந்த கேள்வி’’ என ராகுல் பதில் அளித்தார்.

* நான் என்ன சாவர்க்கரா?

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘என் பெயர் சாவர்க்கர் கிடையாது. என் பெயர் காந்தி. காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை. என் மீதான அவதூறு வழக்கு சட்டப்பூர்வமான விஷயம் என்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாட்டில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான உதாரணங்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன’’ என்றார்.

* நாடு முழுவதும் இன்று சத்தியாகிரகம்

காங்கிரஸ் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சத்தியாகிரகம் நடத்தப்படும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: