ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர்வளை கிராமத்தில் ஆகாசமுத்து காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருத்தேர்வளை கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஆகாச முத்து காளியம்மன் ஆலயம் உள்ளது.
இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள முடிவு செய்தனர். பின் அறநிலைத்துறையின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினரால் யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த கோயில் கும்பாபிஷேகத்தில் திருத்தேர்வளை, கூடலூர், நத்தக்கோட்டை, ஆயங்குடி, ஆனந்தூர், பச்சனத்திக் கோட்டை, கோவிந்தமங்கலம், கருங்குடி, சனவேலி, காவனக்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கண்டு வழிபாடு செய்தனர். இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை ஜெயவீரன், அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.