இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி

சீர்காழி: ‘இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்’ என்று சசிகலா கூறினார். சென்னையில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சசிகலா நேற்று முன்தினம் வந்தார். வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். இதைதொடர்ந்து வேளாங்கண்ணியில் இருந்து காரில் புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை சென்று சசிகலா சிறப்பு வழிபாடு நடத்தினார். சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில்  நவக்கிரகங்களில் ஒன்றான புதன், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மேலும் காசிக்கு இணையான அக்னி, சூரியன், சந்திரன் தீர்த்த குளங்கள் உள்ளது. இந்த குளங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும்  என்பது ஐதீகம்.

கோயிலில் இருந்து வெளியே வந்த சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது அதில் ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் ஓ.பன்னீர்செல்வம் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் உள்ள 2 அணிகளையும் (இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி) இணைத்து, நான் தலைமையேற்க வாய்ப்புள்ளது. அதிமுக என்ற இயக்கம் எம்ஜிஆர் போட்ட விதை. அதை வளர்த்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதற விடாமல் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: