ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பான எதிர்க்கட்சிகளின் மனுவை ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை அடக்க, தன்னாட்சி மிக்க புலனாய்வு அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.   இது குறித்து, ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில்,  9 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தன. இந்நிலையில், புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக திமுக, ஆர்ஜேடி, பிஆர்எஸ், திரிணாமுல் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன.

இது குறித்து தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையீடு செய்தார். அப்போது, ‘95% வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கைது நடவடிக்கைக்கு முன்பும், பின்பும் புலனாய்வு அமைப்புகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்க வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தார். இதனை கேட்ட தலைமை நீதிபதி  டிஒய். சந்திரசூட், மனுவை ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.

Related Stories: