தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க பேரவையில் மீண்டும் தீர்மானம் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு, சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றியஅரசக்கு அனுப்பிவைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பது நீண்ட நாட்களுக்கு முந்தையது என்பதாலும், அதன்பின் சூழ்நிலை மாறியிருப்பதாலும் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட வினாவுக்கு நேற்று எழுத்து மூலம் விடையளித்த நடுவண் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமின்றி, கர்நாடகம், குஜராத், சட்டீஸ்கர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றத்திலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கருத்துரு பற்றி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், ஆனால், அந்த கருத்துருவை ஏற்க உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார். அதனால்தான் மாநில மொழிகளை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க இயலவில்லை என்றும் கூறினார்.

நடுவண் அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடுகள் மாநில மொழிகளுக்கு எதிரானவை ஆகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடந்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வழக்கறிஞர்கள் குழுவையும் அனுப்பி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: