நோய்கள் ஏற்படுவதால் இட மாற்றம் செய்ய வலியுறுத்தி ரப்பர் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்: செங்கல்பட்டு அருகே பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, தனியார் ரப்பர் தொழிற்சாலையால் சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறி தொழிற்சாலையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் தனியார் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய ரப்பர்களை புதுப்பித்து, புதிய ரப்பர் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வரும் துர்நாற்றத்தால், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தொழிற்சாலை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுவாச கோளாறு மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. தொழிற்சாலை கழிவுநீரால் நிலத்தடிநீரும் மாசடைந்து வருவதாக கூறி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் ‘ரப்பர் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு  மாற்ற வேண்டும் என பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்துள்ளோம்.

எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அதே இடத்தில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதனை உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர். இதனை கேட்ட போலீசார், ‘இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுங்கள். நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும். தற்போது, கலைந்து செல்லுங்கள்’ என்றனர். இதையடுத்து, அவர்கள் முற்றுகையை  கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Related Stories: