பாலாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் மதுராந்தகம் எம்எல்ஏ வலியுறுத்தல்

மதுராந்தகம்: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில், ‘மதுராந்தகம் தொகுதி, ஈசூர் ஊராட்சியிலிருந்து வல்லிபுரம் ஊராட்சியை இணைக்கும் பாலாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இது மிகவும் பழைமையானது. இந்த பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. அது மதுராந்தகத்திலிருந்து திருக்கழுக்குன்றம் செல்வதற்கு மிக முக்கியமான சாலையாக விளங்குகிறது. மேலும், இந்தப் பாலம் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இவ்வாறு பாலம் சேதமடைகின்றபொழுது மதுராந்தகம் செல்பவர்கள் ஆற்றை கடக்க முடியாமல், செங்கல்பட்டு சென்றுதான் மதுராந்தகம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.  எனவே, மழை காலங்களில் அந்தப்பாலம் இதுபோன்று அடிக்கடி சேதமடைந்து, பின்பு அது தற்காலிகமாகத்தான் சரிசெய்யப்படுகிறது. நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘உறுப்பினர் அடிக்கடி பழுது ஏற்படுகிறது என்று சொன்னார். ஆனால், அது எந்தப் பாலம் என்று பார்க்க வேண்டும். அது ஊராட்சியின் கீழ் வருகின்ற பாலமா, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகின்ற பாலமா அல்லது நெடுஞ்சாலை துறையில் இருக்கின்ற ஒரு பிரிவை சேர்ந்த பாலமா என்று பார்க்க வேண்டும்.

பாலத்தை பற்றி கேட்டதனாலேயே எல்லா பாலங்களையும் நீர்வளத்துறை செய்து தராது. எங்கள் துறையின்கீழ் வருகின்ற பாலங்களுக்குதான் நான் செய்து தர முடியும். பாலங்கள் கட்டுவது என்பது பல துறைகளின்கீழ் வருகின்றன. நீங்கள் சொல்வது நியாயமான பிரச்னை. இது தொடர்பான அனைத்துத் துறை அமைச்சர்களும் நீங்கள் சொன்னதை கவனித்திருக்கிறோம். யாராவது ஒருவர் அதைக் கட்டி கொடுக்கிறோம்’என்றார்.

Related Stories: