பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்தது போலீஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நரேந்திரன். இவர், காஞ்சிபுரம் அருகே குருவிமலை வலத்தோட்டம் வசந்தம் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு, கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்காக வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் மொத்தம் 6 அறைகள் உள்ளது. இதையொட்டி குடோனும் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அனைத்தும் குடோனில் பாதுகாப்புடன் சேகரித்து வைக்கப்படும். மேலும், இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நரேந்திரன், காஞ்சிபுரம் பகுதியில் பட்டாசு கடை வைத்து, பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் மொத்தமாகவும் வியாபாரிகளுக்கு பட்டாசுகள் விற்பனை செய்கிறார்.

திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் தொழில் கூடத்தில் நிகழ்ந்த திடீர் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்த நிலையில் மருத்துவமனையில் கஜேந்திரன், பூபதி, விஜயா, சசிகலா உயிரிழந்துள்ளார். வெடி விபத்தில் காயமடைந்த 7 பெண்கள் உட்பட 15 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 6 அறைகளில் 4  அறைகள் இடந்து தரைமட்டமானது.

இந்த ஆலையில், காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அனைவரும் தங்களது வேலையில் ஈடுபட்டிருந்தபோது பகல் 11 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியன.

சிறிது நேரத்தில் மொத்தமுள்ள 6 அறைகளில் 4 அறைகள் தூள் தூளாக பறந்தது. வேலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயத்துடன் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் பாட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் குடோன் உரிமையாளர் நரேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் நரேந்திரன் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Related Stories: