பெரணமல்லூர் பகுதியில் ஆலங்கட்டி மழையால் நெற் பயிர்கள் சேதம்-விவசாயிகள் வேதனை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.  இந்நிலையில், நேற்று முன்தினம் பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர், வாழைப்பந்தல், சடத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மழை பெய்தது. அப்போது கொருக்காத்தூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பெய்த மழையின் போது மழைத்துளியுடன் ஆலங்கட்டி விழுந்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் வியப்புடன் விழுந்த பனிக்கட்டிகளை சேகரித்து வைத்துக் கொண்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்த அதே நேரத்தில் விவசாயிகள் மத்தியில் சோகம் நிலவியது. குறிப்பாக வயல்வெளிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் உதிர்ந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவானது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கோடையின் தாக்கத்தால் பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். தவிர எங்கள் பகுதியில் விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன் மூலம் விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க தயாராக இருந்தோம். ஆனால் இங்கு ஆலங்கட்டி துகள்கள் நிலத்தில் விழுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் அதிகளவு நிலத்திலேயே கொட்டி விட்டது.

இதனால் அறுவடை செய்தாலும் விவசாயத்திற்கு செய்த செலவு தொகையை கூட எங்களால் எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழலில் உள்ளோம். திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஈடான தொகையினை அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: