இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது என ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீசெல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால் அந்த வழக்குகளை மார்ச் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறேன்.

தேர்தல் நடைமுறைகளை தொடரலாம், தீர்மானத்தை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கும் இந்த வழக்குகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் முதலமைச்சராக, நிதியமைச்சகராக பதவி வகித்துள்ளார்; 1977 முதல் கட்சியில் இருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கியது நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. இரட்டை தலைமை முடிவு தன்னிச்சையானது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தோணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டுள்ளது எனவும் வாதிட்டார்.

Related Stories: