வருமானத்திற்கு அதிகமாக ரூ.1 கோடி சொத்து சேர்த்ததாக புகார் ஊரக வளர்ச்சி இயக்குநர் தர்மபுரி வீட்டில் ரெய்டு: வேலூர், திருச்சியிலும் விஜிலென்ஸ் அதிரடி; முக்கிய ஆவணங்கள் சிக்கியது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர், திருச்சியிலும் சோதனை நடத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி (44). முன்னாள் வருவாய் ஆய்வாளர். இவரது மனைவி ஆர்த்தி (41). இவர் கடந்த 2019-2020ல் தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக  பணியாற்றினார். தற்போது அவர் வேலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக உள்ளார்.

இந்நிலையில் திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்ததையடுத்து தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு நல்லம்பள்ளி அருகே, நார்த்தம்பட்டியில் உள்ள தோட்டத்துடன் சேர்ந்துள்ள வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. சோதனையில் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூரில் ஆர்த்தி தங்கியுள்ள கூடுதல் கலெக்டர் பங்களாவில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை சோதனை நடத்தினர்.

மேலும் திருச்சியில் காஜாமலை இபி காலனியில் ஆர்த்தியின் தந்தையான ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், வருமானத்தைவிட ரூ.1 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரத்து 954 கூடுதலாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. 2 மணிநேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. அதை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

Related Stories: