தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி பயிர் கடன்: நெல் குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 உயர்வு

* சிறுதானிய உற்பத்தி பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

* பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி

* 40,000 ஹெக்டேரில் மிளகாய் மண்டலம்

சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் ரூ.14,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.100ம், பொதுரக நெல்லுக்கு  ரூ.75ம் ஊக்கத்தொகை, பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார். வேளாண் துறைக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.38,904.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இதில், 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை 21ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் கூடியதும், 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு: உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களை பெற வேண்டும், வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும், அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற 2 வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. 2021-22ம் ஆண்டில் பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு, ஒரு லட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 லட்சத்து 48 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

2021-22ம் ஆண்டில், 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்தது. இது 2020-21ம் ஆண்டைவிட 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல். 2021ம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12ம் தேதியன்றும், 2022ம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24ம் தேதியன்றும் மேட்டூர் அணையை திறந்து வைத்ததால், தஞ்சை தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெற்பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன.  இதனால், 2022-23ம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை. உழைப்பை சிந்தி, வியர்வையை இறைத்து, தூக்கத்தை துண்டித்து, இரவை பகலாக்கி, பசியை மறந்து, உழைத்து பெற்ற விளைபொருட்கள் அறுவடைக்கு பின்பு, வீணாவதை தடுத்திட, அரசு புதிய குளிர்பதன கிடங்குகள், தானிய பாதுகாப்பு கிடங்குகள், உலர் களங்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்து, விவசாயிகளின் நலம் பேணும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

* பனை மேம்பாட்டு இயக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனங்கன்றுகள் விநியோகம், 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்களுக்கு 510 உபகரணங்கள், பனை மரம் ஏறுவதற்கு 1,000 உபகரணங்கள்  விநியோகிக்கப்பட்டதுடன், பனை மரம் ஏறும் சிறந்த இயந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பனை பொருட்களின் மதிப்புக்கூட்டல் ஊக்குவிக்கப்படும். விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டலுக்கான கொட்டகை, உபகரணங்கள், பாதுகாப்பாக மரம் ஏறுவதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் பனை வெல்லம், பனங்கற்கண்டு, பிற பனை சார்ந்த பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுவதோடு மகளிருக்கு பனை ஓலைபொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

* கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் குறுகிய கால பனை ரகங்களை உருவாக்குதல், மதிப்புக்கூட்டுதல் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் முக்கியத்துவம் அளித்து புதிய குட்டை ரக பனை மரங்களை உருவாக்கி அவற்றின் நடவுப்பொருட்களை கிடைக்கச்செய்வது, நடவு, ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிமுறைகளை நெறிப்படுத்துவது, நீரா, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தை ஆய்வதற்கான தர ஆய்வுக்கூடம் அமைத்தல், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு, தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.

* 2022-23ம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ரூ.12,648 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு சராசரியைவிட 89 சதவீதம் அதிகம். வரும் ஆண்டில் ரூ.14,000 கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்கப்படும்.

* 2022-23 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 27 லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.5,778 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும்.

* கிராமங்கள்தோறும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றி கிடைக்க ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பகுதிகேற்ற வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விவசாயிகள் தேவைக்கேற்ப இ- வாடகை செயலியுடன் இணைத்து வாடகைக்கு விடப்படும். இதற்கென ரூ.500 கோடி நபார்டு வங்கி உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்படும்.

* சர்க்கரை ஆலைகளும், கரும்பு பயிரும், உழவர் பெருமக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாகி, மனிதனின் வருவாய் அதிகரிக்க ஆதாரமாக இருந்து வருகின்றன. 2021-22 பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 அறிவிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.214 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 பருவத்தில் குறிப்பிட்ட அளவைவிட 55,000 எக்டர் அதிகரித்துள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு பதிவு பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, 2022-23 அரவை பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.253 கோடி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

* கரும்பில் உயர் மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம் அடைந்திடவும், கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் நோக்குடனும், உயர் விளைச்சல், உயர் சர்க்கரை கட்டுமானம் கொண்ட வல்லுநர் விதை கரும்பு, பருசீவல் நாற்றுகள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழு கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு தளங்கள் சிமென்ட் கான்கிரீட் தளங்களாக மேம்படுத்தப்படும். இதற்கென வரும் ஆண்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* வேளாண்மை பட்ஜெட்டுக்கு இந்த நிதியாண்டு மொத்தம் ரூ.38,904.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டின் திருத்த மதிப்பீடு ரூ.32,775.78 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.33,007.68 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வேளாண்மை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

* 2.07 மணி நேரம் வேளாண் பட்ஜெட் படித்த அமைச்சர்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு படிக்க தொடங்கி, பிற்பகல் 12.07 மணி வரை வாசித்தார். சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் படித்தார். நேற்று முன்தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 3 நிமிடங்கள் படித்தார். அதைவிட கூடுதலாக 4 நிமிடங்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை பட்ஜெட் படித்தது குறிப்பிடத்தக்கது.

* பச்சை துண்டு அணிந்து...

வேளாண்மை நிதி நிலை அறிக்கையை படிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பேரவைக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 9.59 மணிக்கு வந்தார். அப்போது, திமுக மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகள் விரும்பி அணியும் பச்சை துண்டை தோளில் போட்டு இருந்தார். பச்சை துண்டுடன், பட்ஜெட் உரை முழுவதையும் படித்தார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள் பலரும் பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பூங்கொத்தும், நவதானியங்களால் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: