ஆண்டிபட்டியில் டூவீலர் திருடிய நபர் கைது-சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்தனர்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் வினோத்குமார் (27). இவர் வீடுகளுக்கு சென்ட்ரிங் போடும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வினோத்குமாரின் அப்பா செல்லத்துரைக்கு உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டூவீலரில் சென்றுள்ளார்.

அப்போது டூவீலரில் மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்று சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து வினோத்குமார் ராஜதானி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பின்பு குற்றப்பிரிவு போலீசார் துரைராஜ் தலைமையிலான போலீசார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர் ஒருவர் டூவீலரை திருடி சென்றது சிசிடிவி கேமராவில் தெரியவந்தது. கேமரா காட்சிகளை வைத்து போலீசார்‌ தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் டூவீலரை திருடியவர் ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் விக்னேஷ்குமார் (31) என்பது தெரிய வந்தது. அவரை ராஜதானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: