கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சிதைந்து கிடக்கும் சிறுகுளம் சீரமைக்கப்படுமா?

* பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

* வருமானத்தை பெருக்க படகு சவாரி விடலாம்

சின்னமனூர் : சின்னமனூர் சீலையம்பட்டி மெகா சிறுகுளம் சிதைந்து கிடப்பதால் விவசாயிகள் பொதுமக்களின் நலன் கருதி தூர்வாரி கரைகள் உயர்த்தி பலப்படுத்தி படகு சவாரி துவக்கினால் அரசிற்கு மிகுந்த வருமானம் கிடைக்கும். இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர் அருகே தேனி ஒன்றியத்திலுள்ள சீலையம்பட்டி. கோட்டூர் என இரண்டு ஊராட்சிகளில் 18 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசிக்கின்றனர். பெரும் பாலும் இருபோகம் நெல் சாகுபடி மற்றும் தென்னை,வாழை, பூக்கள் வகைகள், தக்காளி, காய்கறிகள் என விவசாயமே பிரதானமாக இருக்கிறது. திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை வரிசையில் சீலையம்படி, கோட்டூர் இடையே சிறுகுளம் என்ற மெகா கண்மாய் 141 ஏக்கரளவில் பறந்து கிடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் கடக்கும் அனைவரின் கண்களுக்கும் தப்பாத சிறுகுளம் பெருங்குளமாக இருக்கிறது.

முல்லைபெரியாறு அணை கட்டிய நேரத்தில் திறக்கப்படும் தண்ணீரை தேக்கி வைக்க லோயர் கேம்ப் துவங்கி வரிசை யாக கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரையில் 12 மெகா கண்மாய்கள் உருவாக்கப்பட்டு 130 ஆண்டுகளையும் கடந்து நிலத்தடி நீர் தேவைக்கும், கம்பம் பள்ளத்தாக்கு 2 போக நெல் சாகுபடிக்கும் பிற விவசாயங்களுக்கும் பயனை தந்து வருகிறது.இந்த சிறுகுளம் ஆயிரத்து 814 மீட்டர் சுற்றளவில் இருப்பதால் நூறு மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி கம்பீரத்தில் நிற்கும்.

சீலையம்பட்டி, கோட்டூர், பூலானந்தபுரம், தர்மபுரி சுற்றியுள்ள 10 கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீரால் 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கும், 250 ஏக்கர் ஆயக்கட்டுக்கும் பாசன பற்றாக்குறையும் இல்லாமல் காக்கிறது. 40 ஆண்டாக பராமரிப்பு கைவிட்டதால் சுற்றியுள்ள தடுப்புச் சுவர்களும், மதகுகளும் பழுதாகி வலு இழந்துள்ளதால் முக்கால் பங்கு கருவேல மரங்களும் வளர்ந்து குளத்தினை மறைத்து புதராக கிடப்பதால் கால் பங்கு தண்ணீரே நிற்கிறது.

2015ம் ஆண்டு 12 குளங்களுக்கு ஆறு கோடி ரூபாய் செலவில் மதகுகள், கரைகளையும் பலப்படுத்தி தூர்வாரி கருவே ல மரங்களை அகற்ற அரசு உத்தர விட்டது. ரூ.60 லட்சம் செலவில் சிறுகுளத்தை சீரமைக்க ஏலம் எடுத்த ஏலதாரர் இருந்த கருவேல மரங்களை அகற்றி, கடத்தி காளவாசல்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டி குளத்தில் பணிகள் செய்யாமல் அதிமுக ஆட்சியின் ஆசியோடு அப்படியே சுருட்டி விட்டனர்.

40 ஆண்டுக்கு மேலாக இருபோக நெல் சாகுபடிக்கு பாசன பற்றாக்குறையும் நில த்தடி நீர் ஊற்றெடுப்பதற்கு பெரும் தடை யாக இருந்து வருகிறது. 60 ஏக்கருக்கு மேலாக இந்த குளத்தில் ஆக்கிரமிப்பு செய்து தென்னை தோப்புகளாகவும், வயல் வெளிகளாக மாறி மிகச் சிறு குளமாக கிடக்கிறது.திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ் சாலையில் இருக்கும் சிறுகுளத்தில் படகு சவாரி திட்டத்தைக் கொண்டு வந்து செயல் படுத்தினால் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக விசிட் அடித்து சவாரி செய்து கடப்பார்கள்.

இதில் ஸ்டீம்பர் விடுவதற்கான கட்டமை ப்புகளை உருவாக்கி தமிழக சுற்றுலாத் துறையிடம் ஒப்படைத்து வருமானம் ஈட்டலாம். எனவே இந்த குளத்தை ஆய்வு செய்து அரசு உறுதி படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப் பாக இருக்கிறது.சீலையம்பட்டி மலைராஜா கூறுகையில், ‘‘சிறுகுளம் மிக பெரிய அளவில் உருவாக்கி பெருமளவில் தண்ணீர் தேக்கப்படுகிறது. 60 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பிலும் முட்புதர்கள் வளர்ந்து படு மோசமான நிலையில் உள்ளது. பாசன நீர் தேங்க வழியின்றி கடந் து விடுவதால் கால் பங்கு தான் தேங்குகிறது.

தூர்வாரி பணிகளும் செய்து முழு கொள்ளளவை தேக்கி படகு சவாரி விடலாம் லாபத்தை பார்க்கலாம் விவசாயிகளுடன் அரசும் சேர்ந்து பயன் அடையலாம் என்றார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறுகுளம் கடந்த 2015 ல் மதகுகள் பழுது நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குளத்திற்கு சிறப்பு பராமரிப்பு திட்டம் கேட்டு அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம் என்றார்.

Related Stories: