ஆரணியில் அரசு பள்ளிகளில் உலக சிட்டுக்குருவி தினவிழா 300 மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூடு வழங்கி விழிப்புணர்வு

ஆரணி : ஆரணி அருகே அரசு பள்ளிகளில் உலக சிட்டுக்குருவி தினமான நேற்று 300 மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூடுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலக சிட்டுக்குருவி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று உலக சிட்டுக்குருவி தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.  ஆசிரியர்கள் ரமேஷ், மனோகரன், தொண்டு நிறுவன மேலாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெயம் வரவேற்றார். இதில், கால்நடை மருத்துவர் பழனி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, சிட்டு குருவிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

தொடர்ந்து, உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மெழுகு கப்புகளைக் ெகாண்டு சிட்டுக்குருவி உருவ படத்தை வரைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பின்னர், மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது.

சிட்டுக்குருவி தினத்தையொட்டி பையூர், அகராப்பாளையம், வேலப்பாடி, லாடப்பாடி, கே.ேக.தோப்பு, கருணாகரம்பட்டு ஆகிய 6 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூடுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆரணி அருகே கருணாகரம்பட்டு கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் அனைத்து வீடுகளுக்கும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தி சிட்டுக்கூருவி கூடு வழங்கப்பட்டது.

Related Stories: