சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!

மாஸ்கோ: சீன அதிபர் ஜின்பிங்  திங்களன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உக்ரைன் போர் சூழலில் இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  அமெரிக்காவுக்கு பிறகு உலகின் 2வது வல்லரசு நாடாகவும், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியுமான சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார்.3 வது முறையாக சீனாவின் அதிபராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட சீன அதிபர் ஜின்பிங் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

ரஷ்யாவிற்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகின்றன.இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவர்களின் ரஷ்ய பயணத்தில் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் புதினுடன் பேசினார். இது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாஸ்கோ உடனான உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளையில் உக்ரைன் நெருக்கடியை தீர்க்க சீனா 12 அம்ச முன் மொழிவை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மோதலை தீர்ப்பதற்கான சீனாவின் ஆலோசனைகளை தாம் மரியாதையுடன் பார்ப்பதாகவும் சமீபத்திய சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்வதாக புதின் சீன அதிபர் ஜின்பிங்கிடம் தெரிவித்தார். இதனிடையே இருவருக்குமான பேச்சுவார்த்தை இன்றும் தொடர உள்ளது. 

Related Stories: