மேலாளரின் இ-மெயில் மூலம் சல்மானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குபதிவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சல்மான் கானின் மேனேஜர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 18ம் தேதி சல்மான் கானின் மேலாளரின் மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தாதா கோல்டி பிரார், நடிகர் சல்மான் கானுடன் பேச வேண்டும் என்றும், மிரட்டும் வகையில் சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் மின்னஞ்சலானது, கனடாவில் இருந்து தனது கும்பலை வழிநடத்தி வரும் பிரபல தாதா கோல்டி பிராரின் கூட்டாளியிடம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக  பாந்த்ரா போலீசார் ஐபிசி 506 (2), 120  (பி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் சிறையில்  அடைக்கப்பட்ட தாதாக்கள் லாரன்ஸ் பிஷ்னோய், ரோஹித்  கார்க் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், சல்மான் கானுக்கு எதிராக வெளிப்படையாக மிரட்டல் விடுத்து பேசினார். இதுகுறித்தும் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: