திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்துக்கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கூறி வருகிறார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை என செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை இருந்திருந்தால் முழு பட்ஜெட்டை கேட்டு அதன் பின் கருத்து தெரிவித்து இருக்கலாம். திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில்; மக்கள் நலன் மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை, மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் முழு பட்ஜெட்டை கேட்டு அதன் பின் கருத்து இருக்கலாம். திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்துக்கொள்ளாமல் பழனிசாமி கருத்துகளை கூறி வருகிறார்.

திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் செய்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள். கோடநாடு, பொள்ளாச்சி சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. இந்த சம்பவத்தை முழுமையாக மறைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையே டி.வி. பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து இருந்தது. ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். பல குற்றங்களை வரிசைப்படுத்தக்கூடிய ஆட்சியை நடத்தி வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பெண்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை, ஆனால் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் 85% நிறைவேற்றப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: