பாரிமுனை பகுதியில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பதுக்கிய 3 பேர் பிடிபட்டனர்: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: வடக்கு கடற்கரை பகுதியில் விலை மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்துரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர், ரொக்கம், 5 செல்போன் மற்றும் 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பாரிமுனையில் விலை மதிப்புள்ள போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, வடக்கு கடற்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த 17ம் தேதி மாலை பாரிமுனை, இப்ராஹிம் சாலை, தம்புசெட்டித் தெரு சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களிடம் போலீசார் சோதனை செய்தனர்.  அதில், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் ஏழுகிணறு வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் (30), மண்ணடி மரக்கையர் லப்பை தெருவைச் சேர்ந்த பசீர் அகமது (24), கொடுங்கையூர் முத்தமிழ்நகர் பவானி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மொய்தீன் சைபுல்லா (38) என்பது தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்துரூ.10 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம்ரூ.4,500 மற்றும் 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது இலியாஸ் மீது ஏற்கனவே குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் விசாரணைக்குப் பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்றுமுன் தினம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இவர்கள் எங்கிருந்து போதை பவுடரை வாங்கி வந்தார்கள், எங்கெல்லாம் விற்பனை செய்தார்கள் என்பது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: