வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல போலி வீடியோ பகிர்ந்த பீகார் வாலிபர் கைது: திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி

திருப்பூர்:  தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் வாலிபரை திருப்பூர் தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் அசாதாரண சூழலை வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்படுத்தியது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த மாதம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தனர்.  அந்த வகையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர ஷனி (32) என்பவருடைய சமூக வலைதள கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை தமிழகத்தில் நடந்தது போன்று போலியாக சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவரை தொடர்பு கொண்டு இது போலியான வீடியோக்கள் என்றும் உடனடியாக அவற்றை நீக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  அவரது செல்போன் எண்ணை கொண்டு அவர்  பீகாரில் இருப்பது தெரியவே அங்கு சென்ற போலீசார் உபேந்திர ஷனியை நேற்று முன்தினம் கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: