விக்கிரவாண்டி, மே 15: விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் ஒன்பது குடிநீர் மினி தொட்டியும், அய்யூர் அகரத்தில் இரண்டு மினி குடிநீர் தொட்டியும் உள்ளது. இது பழுதடைந்து பல நாட்களான பிறகும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். இது குறித்து கடந்த வாரம் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் 15ம் தேதிக்குள் சரிசெய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் இதுவரையில் குடிநீர் தொட்டியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயரவிதுரை தலைமையில் பெண்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்றிரவு அப்பகுதியில் திரண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
