ராஜஸ்தான் பேரவை தேர்தலில் மீண்டும் கெலாட் முதல்வர் வேட்பாளர்?.. காங். வெளியிட்ட வீடியோவால் பைலட் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அசோக் கெலாட் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதால், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கும், அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கும் இடையே கட்சிக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

வரும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் அசோக் கெலாட் முன்னிருத்தப்படுவாரா? அல்லது சச்சின் பைலட் முன்னிருத்தப்படுவாரா? என்ற விவாதம் கட்சிக்குள் தொடங்கிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அதிகாரபூர்வ வீடியோ பதிவில், அசோக் கெலாட்டை முன்னிலைப்படுத்தி உள்ளது. அந்த பதிவில், ‘புதிய சவால்களை எதிர்கொள்ள தயார்; 2023 - 28ல் மீண்டும் அசோக் கெலாட்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, உதான் திட்டம், பேருந்துகளில் பெண்களின் பாதி கட்டணம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், குறைந்தபட்ச ஓய்வூதியம், குழந்தைகளுக்கு இலவச பால் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள தகவல்களின்படி பார்த்தால், அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டியால் மீண்டும் சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories: