மகாராஷ்டிர கவர்னரை விமர்சனம் செய்த விவகாரம் தலைமை நீதிபதியை சமூக ஊடகங்களில் கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்

புதுடெல்லி: மகாராஷ்டிர கவர்னரை விமர்சனம் செய்த தலைமை நீதிபதியை சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட வழக்கில் கவர்னர் கோஷியாரி நடவடிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விமர்சனம் செய்தார். இதை தொடர்ந்து சில சமூக ஊடகங்களில் தலைமை நீதிபதி சந்திரசூட் விமர்சிக்கப்பட்டார். அவரை கேலி செய்து தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மூ தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி விவேக் தங்கா எழுதியுள்ள இந்த கடிதத்தில்,  திக்விஜய் சிங், பிரமோத் திவாரி, சக்திசிங் கோஹில், அகிலேஷ் பிரசாத் சிங், அமீ யாஜ்னிக், ரஞ்சீத் ரஞ்சன், இம்ரான் பிரதாப்கர்ஹி, சிவசேனாவின் (உத்தவ்) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்ட எம்பிக்கள் இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். இந்த கடிதத்தின் நகல் ஒன்றிய சட்ட அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், டெல்லி போலீஸ் கமிஷனர், இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,’ இந்தியாவின் தலைமை நீதிபதியை இதுபோன்று சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல் செய்வது நீதியின் நடவடிக்கையில் தலையிடுவது ஆகும். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

Related Stories: