கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் உயிர்தப்பிய ஒன்றிய பெண் அமைச்சர்: போதை லாரி டிரைவர் கைது

விஜயபுரா: கர்நாடகா சென்ற ஒன்றிய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி சாலை விபத்தில் காயமடைந்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா தேசிய நெடுஞ்சாலை-50ல் நேற்றிரவு ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை பாஜக இணையமைச்சர் அமைச்சர் நிரஞ்சன் ஜோதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஒன்றிய அமைச்சரின் கார் மீது மோதியது. இச்சம்பவத்தில் அமைச்சர் மற்றும் அவரது கார் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாஜக ஏற்பாடு செய்துள்ள ‘மகிளா சதஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் நிரஞ்சன் ஜோதி காரில் வந்தார். குடிபோதையில் லாரியை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்தது; காரின்  முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது’ என்றனர். இச்சம்பவம் குறித்து நிரஞ்சன் ஜோதி கூறுகையில், ‘கடவுளின் அருளால் நலமாக இருக்கிறேன். டிரைவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. எங்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை பெற்றோம்’ என்றார்.

Related Stories: