அமித்ஷா கவனத்துக்கு கொண்டு செல்வோம் கர்நாடக எல்லை கிராமங்களில் சுகாதார காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதா?: மகாராஷ்டிராவுக்கு முதல்வர் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக எல்லை கிராமங்களில் சுகாதார காப்பீடு திட்டத்தை அமல்படுத்த மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிரா மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக இருமாநில முதல்வர்களை அழைத்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இருமாநில முதல்வர்களும் இப்பிரச்னை தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்ககூடாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநில எல்லையில் உள்ள 865 கிராமங்களிலும் மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கியா சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தபடும் என்றும் இதற்காக ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மகராஷ்டிரா மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: ‘மகாராஷ்டிரா அரசு எல்லை ஒப்பந்தத்தை மீறியுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். கர்நாடக எல்லை கிராமங்களுக்கு சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்ட உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும். இப்பிரச்னையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொண்டு செல்வேன்.

எல்லை பிரச்னையை மகாராஷ்டிரா அரசு தூண்டுகிறது. இதே போல் மகாராஷ்டிரா எல்லையில் கன்னடம் பேசும் மக்கள் வாழும் கிராமங்களுக்கு நாங்கள் காப்பீடு திட்டம் அறிவிக்க முடியாதா?. மகாராஷ்டிரா அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சரவை முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்’ என்றார்.  இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவரும், மகராஷ்டிரா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமின்றி கன்னட மக்களின் நலனை பாதுகாக்க தவறிய முதல்வர் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: