பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் மார்ச் 17-ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் சாலை மறியல்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

ஈரோடு: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் 17-ல் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் விலையை 1லி பசும்பாலுக்கு ரூ.35 லிருந்து ரூ.42க்கும், எருமைப்பாலுக்கு ரூ.44 லிருந்து ரூ.51 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஊக்கத்தொகைகோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச் 11 அன்று துவங்கிய பால் நிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 7 வீதம் ஊக்கத்தொகை கோரி துவங்கிய போராட்டத்தால் உசிலம்பட்டி, செல்லம்பட்டியில் இருந்து ஆவினுக்கு பால் அனுப்பப்படவில்லை.

இதைதொடர்ந்து உசிலம்பட்டி பால்சேகரிப்பு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆவின் பொது மேலாளர் சாந்தி, துணை பதிவாளர் செல்வம், உதவி பொதுமேலாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பெரியகருப்பன், சுப்பிரமணி, இன்பராஜ், பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், முத்துப்பாண்டி, சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஊக்கத்தொகை குறித்து அறிவிப்பு வரவில்லை என்றால் மார்ச் 17ல் மாநில சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பால் நிறுத்த போராட்டத்துடன் கறவை மாடுகளுடன் சாலை மறியலும் நடைபெறும் என்று பால் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

Related Stories: