எருமாடு அரசு தொடக்கப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் பாதிப்பு

பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு அரசு தொடக்கப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே எருமாடு ஸ்கூல் ஜங்சன் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளி அருகே வெள்ளச்சால், கூலால் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையோரத்தில்  பிலாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகளை கொட்டி வருகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கூளங்கள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளிக்கும் பெரும் இடையூறாகவும் சுகாதாரக்கேடாகவும் இருந்து வருகிறது.

மேலும் நீண்ட காலமாக குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளி மற்றும் சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் பாட்டில்களை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: