நம்பி வந்த தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு தென்காசி அருகே வட மாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா: கறி விருந்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்

கடையம்: தென்காசி அருகே செங்கல் சூளையில் பணியாற்றும் வட மாநில பெண்ணுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையம் அருகே வடக்கு மடத்தூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவரது செங்கல் சூளையில் கொல்கத்தாவை சேர்ந்த 7 குடும்பத்தினர் தங்கி வேலை செய்கின்றனர். இவர்களில் பொறி - தோனியம்மா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது தோனியம்மா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த சொந்த ஊர் சென்று வர செலவு அதிகமாகும். மேலும் தற்போதைய நிலையில், ஊருக்கு சென்றால் சமூக வலைதளத்தில் பரவும் வதந்தியை நம்பி சொந்த ஊர் சென்றதாக கூறி விடுவார்கள்.

எனவே, இங்கு வேலை செய்யும்  உறவினர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என செங்கல் சூளை உரிமையாளர் பாலமுருகன் தெரிவித்து அவரே ஏற்பாட்டையும் செய்தார். அதன்படி, தோனியம்மாளுக்கு நேற்று முன்தினம் வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் கடையம், கோவிந்தபேரி, மாதாபுரம், முக்கூடல்  சுற்று வட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்யும் தோனியம்மாவின் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சடங்குப்படி வளைகாப்பு விழாவும்,  கறி விருந்தும் நடைபெற்றது. அப்போது வடமாநில பெண்கள், ஆண்கள் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து தோனியம்மாவின் கணவரான வடமாநில தொழிலாளி பொறி கூறுகையில், ‘எங்கள் ஊரில் உள்ளது போல் இங்கு மிகவும் சந்தோஷமாக ஆட்டம், பாட்டத்துடன் வளைகாப்பு விழா கொண்டாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார். தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது இங்கு நடந்த வளைகாப்பு விழா, வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு என்றுமே பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் இருந்ததாக தொழிலாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

* வடமாநில தொழிலாளரை தாக்கிய இந்து முன்னணியினர் கைது

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தன்மாய் ஜானா (23), ஜாகாத் (24), கவுதம் சியாமல் (25). இவர்கள் கோவை இடையூர்வீதி அடுத்த மாகாளியம்மன் வீதியில் தங்கி நகைப்பட்டறையில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் இடையூர் வீதி ரோட்டில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி உறுப்பினர்களான சூர்ய பிரகாஷ் (22), பிரகாஷ் (23), மற்றும் கல்லூரி மாணவர்களான பிரகதீஷ்வரன் (20), வேல் முருகன் (19) ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு 3 பேரும் வழி விடவில்லை என தெரிகிறது.

இதில் கோபமடைந்த  4 பேரும் அவர்களை திட்டி, நடுரோட்டில் சரமாரியாக தாக்கினர். முகத்தில் கையால் குத்தினர். கீழே விழுந்தவர்களை அடித்து உதைத்தனர். தப்பி ஓட முயன்றவர்களை துரத்தி சென்று தாக்கினர். மேலும் காந்தி பார்க் பகுதிக்கு சென்று அங்கே பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மோனோ (23), சேக் சவானா (24) ஆகியோரையும் தாக்கியதாக தெரிகிறது. இதில் 5 பேரும் காயமடைந்தனர். இது தொடர்பாக வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து சூர்ய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஷ்வரன், வேல் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: