ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: டெல்லியில் டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றம் குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக மக்களவையில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் எதிர்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கியது. தொடர்ந்து இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளோம். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிக்கவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆன்லைன் தடை மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை.

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆன்லைன் தடை மசோதாவை 4 மாதங்கள் கிடப்பில் வைத்து விட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாததுபோல இருக்கிறது. மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசு அலட்சியமாகச் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: