நகைக்கடையில் பழுது நீக்கம் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்த 347 கிராம் நகைகள் அபேஸ்: ஊழியர் உட்பட 2 பேர் கைது

சென்னை: நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் ரிப்பேர் செய்ய கொடுத்த 347 கிராம் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள தங்க நகைகள் விற்பனை கடையின் மேலாளர் சத்தியநாராயணன் (48) என்பவர், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை பற்ற வைப்பது, ரிப்பேர் செய்வதற்காக 347 கிராம் நகைகள் கொடுத்து இருந்தனர். அந்த நகைகளை எங்கள் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தங்க நகைகளை செய்யும் பிரபீர் ஷேக் என்பவர், அடகு வைத்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிந்து, பிரபீர் ஷேக்கை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, பிரபீர் ஷேக் கடையில் நகைகள் ரிப்பேர் செய்ய வாடிக்கையாளர்கள் கொடுத்த 347 கிராம் நகைகளை தனது நண்பரான பாலமுருகன் என்பவரிடம் கொடுத்து அடகு கடையில் வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து 347 கிராம் மோசடி செய்த சிஐடி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த கடையின் ஒப்பந்த ஊழியர் பிரபீர் ஷேக்(32), வியாசர்பாடி எம்.கே.பி.நகரை சேர்ந்த பாலமுருகன் (51) ஆகியோரை கைது செய்தனர்.  மேலும், அடகு வைத்த நகைகளை மீட்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: