மீன்பிடி படகிற்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் கடல்சார் வாரிய முன்னாள் அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கடலூர் துறைமுகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீன்பிடிக்கும் படகுகளை இயக்க தமிழ்நாடு கடல்சார் வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயபாரதி நிறுவனத்தின் படகுகளை பதிவு செய்வதற்கு கடல்சார் வாரிய நிர்வாக அதிகாரியாக இருந்த முகமது அலி என்பவர் 500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட நீதிமன்றம் முகமது அலியை கடந்த 2013ம் ஆண்டு விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வழக்கறிஞர் ஜி.வி.கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கடலூர் மாவட்ட நீதிமன்றம் முகமது அலி விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: