கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் கலர் கலர் நண்டுகள் நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி

வேதாரண்யம்: கோடியக்கரையில் கலர் கலராக பிடிபடும் நண்டுகள் மீனவர்கள் மகிழ்ச்சி நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு சீசன் மிக மந்தமாக காணப்பட்டது. கடலுக்கு சென்ற மீனவர்கள் மிக குறைந்த அளவே மீன் இறால், நண்டுகளை பிடித்துக் கொண்டு வந்தனர். தற்போது சீசன் களை கட்ட துவங்கி உள்ளது.

நேற்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் வலையில் அதிகளவு நண்டுகள் உள்ளிட்ட பல்வேறுவகை மீன்கள் அதிகளவு கிடைத்திருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சீசன் தொடங்கியது முதல் மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் ஐந்து மாதத்திற்கு பிறகு தற்போது சீசன் முடியும் நேரத்தில் ஷீலா, காலா, வாவல், முறல், திருக்கை, மத்தி, கலர்மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவு கிடைப்பதாலும் இங்கிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மீன் ஏற்றுமதியவதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று கோடியக்கரை மீனவர்கள் வலையில் அதிக விலைபோகும் கல்நண்டு மற்றும் பார் நண்டு, பிஸ்கட் நண்டு, மூன்றுபுள்ளி நண்டு, சிலுவை நண்டு, நீலக்கால் நண்டு என பல தரபட்ட நண்டுகள் சிக்கின.

சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இங்கு பிடிக்கப்படும் 1 கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள கல் நண்டுகள் உயிருடன் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிஸ்கட் நண்டு 120 ரூபாய்க்கும், சிலுவை நண்டு 150க்கும், மூன்று புள்ளி நண்டு 270க்கும், நீலக்கால் நண்டு 540 க்கும், பேய் நண்டு 100 க்கும் ஏலம் போனது. இதில் நீலக்கால் நண்டு கடற்கரையில் அவிக்கப்பட்டு ஐஸ் கிரீம் செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கபடுகிறது. அதிக அளவில் நண்டு கிடைத்ததால் மீனவர்களுக்குநல்ல லாபம் கிடைக்கிறது. சீசன் முடிந்த நேரத்தில் சீசன் களை கட்டுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் நல சங்க முன்னாள் செயலாளார் சித்திரவேல் கூறியதாவது, கோடியக்கரையில் சீசன் முடிய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 20 டன்னுக்கு மேல் சிறிய வகை மீன்கள் கிடைக்கிறது. மேலும் கல் நண்டு, சிலுவை நண்டு, புள்ளி நண்டு, பேய் நண்டு, நீலக்கால் நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நண்டு வகைகள் நாள்தோறும் கிடைக்கின்றன. இந்த நண்டுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதால் சீசன் முடியும் வரை நல்ல விலை கிடைக்கும் என்று கூறினார்.

Related Stories: