அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டினார் சுதர்சனம் எம்எல்ஏ

புழல்:அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் நேற்று ரூ.39.95 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, புதிய ஊராட்சி மன்ற கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார். புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கட்டுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.39.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் நேற்று கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆஷா கல்விநாதன் தலைமை தாங்கினார். புழல் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், புழல் ஒன்றிய திமுக செயலாளரும் வழக்கறிஞருமான புழல் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், ஊராட்சி செயலர் பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: