ராகுல் காந்தி மீது விமர்சனம் துணை ஜனாதிபதிக்கு காங். கண்டனம்: ‘ஆளும்கட்சியின் சியர்லீடராக இருக்க வேண்டாம்’ என காட்டம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி நடுவராகத்தான் இருக்க வேண்டும். ஆளும்கட்சியின் சியர்லீடராக இருக்க கூடாது என்று ராகுல்காந்தியை விமர்சனம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் லண்டன் சென்று இருந்த போது,’ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும் போது மைக் அணைக்கப்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார். இதை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தங்கர் கடுமையாக விமர்சனம் செய்தார்.  

காங்கிரஸ் தகவல் தொடர்பு துறை செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறியிருப்பதாவது: ஒரு அரசியல் அமைப்பு பதவியில் நியமிக்கப்படும் போது நமது கட்சி விசுவாசத்தை கடந்து செயல்பட வேண்டும். மதிப்பு மிக்க பதவியில் இருந்து கொண்டு ராகுல்காந்தியை பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இருப்பது வியப்பை அளிக்கிறது. அவர் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர் அரசியல் அமைப்பை பாதுகாக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் அவர் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது.

ராகுல் நாட்டில் பலமுறை சொன்ன கருத்தைத்தான் இங்கிலாந்தில் தெரிவித்தார். மற்ற சில நபர்களைப் போலில்லாமல், அவர் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து அவரது நிலைப்பாடு மாறுபடாது. ராகுலின் அறிக்கை உண்மையானது. தற்போதைய யதார்த்தத்தை அதுகுறிக்கிறது. இதை எல்லாவற்றையும் விட மேலாக மாநிலங்களவை தலைவர் ஒரு நடுவர், நண்பர், தத்துவஞானி, அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். அவர் எந்த ஆளும் கட்சிக்கும் சியர்லீடராக இருக்க முடியாது. வரலாறு தலைவர்களை அளவிடுவது அவர்கள் தங்கள் கட்சியைக் காக்கும் செயல்களின் அடிப்படையில் அல்ல. மாறாக மக்கள் சேவையில் அவர்களின் கண்ணியத்தின் அடிப்படையில் தான் இந்த அளவீடு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: