பாட்னா, டெல்லி, பெங்களூருவில் தனிப்படை முகாம் பணத்திற்காக வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி வீடியோ: டிஜிபி அதிர்ச்சி தகவல்

கோவை : கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி தொழில் நிறுவனத்தினருடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். அப்போது தொழில் நிறுவனத்தினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி முதல் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என பரவி வரும் வதந்தி வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாட்னா, டெல்லி, பெங்களூரு நகரில் தனிப்படை போலீசார் இது போன்ற வதந்தி பரப்பும் கும்பலை பிடிக்க முகாமிட்டுள்ளனர். போலீஸ் எடுத்த நடவடிக்கை காரணமாக தொடர்ந்து வதந்தி பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள், தொழில் வளாகம் போன்ற பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், போலீஸ் ரோந்து பணி மற்றும்  கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வதந்தி வீடியோ விவகாரம் தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  ரகசிய விசாரணையில் ஒரு கும்பல் பணத்திற்காக இது போல் வதந்தி வீடியோ தயாரித்து வெளியிடுவதை கண்டறிந்திருக்கிறோம். தாம்பரம் பகுதியில் ரோட்டோரம் தங்கி இருந்த வடமாநில நபரை தாக்கியது போலவும் அவர் பாதிக்கப்பட்டும் அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போலவும் வீடியோ பதிவு செய்து வதந்தி ஏற்படுத்த பார்த்தார்கள். இந்த வீடியோ பதிவு செய்த நபரை கைது செய்து இருக்கிறோம். பாஜக பின்புலம் இதில் இருக்கிறதா? என தெரியவில்லை. விசாரணைக்கு பின் தெரியவரும். கைது செய்யப்பட்ட சிலருக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் சுமார் 10 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். சரியான கணக்கெடுப்பு இதுவரை எடுக்கவில்லை.  இவ்வாறு கூறினார்.

* துப்பாக்கிச்சூடு ஏன்? டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டியில், ‘குற்றவாளிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு திட்டமிட்டது அல்ல. அந்த இடம் மற்றும் சூழ்நிலையை பொருத்து துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. சில இடங்களில் போலீசார் பிரச்னைக்கு ஏற்ப லத்தி பிரயோகம் செய்ய வேண்டி இருக்கிறது.‌ ஆபத்து ஏற்படும்போது போலீசார் குற்றவாளிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என போலீசார் செயல்படவில்லை’ என்றார்.

Related Stories: