செஞ்சி கோட்டை ஏறுனவன் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது: அண்ணாமலையை வறுத்தெடுத்த ஜெயக்குமார்

சென்னை: செஞ்சி கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது.  மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு  முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியில் விருப்பப்பட்டு சேருபவர்களை தடுக்க முடியாது. அரசியல்  ரீதியான பக்குவம் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு இருக்க வேண்டும். எல்லா  கட்சியில் இருந்தும் அதிமுகவுக்கு வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியில்  இருக்கும் வைத்திலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் சபாநாயகராக  இருக்கும்போது முதல்வர் பதவிக்கு ஆசைபட்டதால்தான் ஜெயலலிதா சபாநாயகர்  பதவியில் இருந்து நீக்கினார் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் 2016ம்  ஆண்டு எனக்கு ஜெயலலிதா எம்எல்ஏ சீட் கொடுப்பாரா? .

எனது மகன்  கல்யாணத்துக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதாவை கூப்பிட்டபோது வந்தார்.  சபாநாயகர் பதவியில் இருந்து என்னை நீக்கியதால், இனி ஜெயக்குமாருக்கு  எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் 2016 சீட் கொடுத்து அமைச்சராக்கியவர்  ஜெயலலிதா. இதில் என்ன சிதம்பர ரகசியம் இருக்கிறது.  எடப்பாடி பழனிசாமி  உருவபொம்மையை பாஜவினர் எரித்துள்ளனர். மாநில பாஜ கட்சி தலைவர் என்ற  முறையில் அண்ணாமலை இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றரை கோடி  தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் என்ன ஆகும்? ஜெயலலிதா போன்று ஒரு தலைவராக  இருக்க விரும்புகிறேன் என்று அண்ணாமலை சொல்லக்கூடாது. செஞ்சி கோட்டை  ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம்  கட்டபொம்மன் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: