திராவிட இயக்கம்தான் பெண்களை துணிச்சல் மிக்கவர்களாக ஆக்கியது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திராவிட இயக்கம்தான் பெண்களை தன்னம்பிக்கை, துணிச்சல் மிக்கவர்களாக ஆக்கியது. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சர்வதேச மகளிர் தின விழா சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரில் நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் அவ்வையார் விருதுகள், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் நாள் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மகளிர் நாள் விழாவில் இலக்கியம் மற்றும் சமூக பணிகளில் சிறந்து விளங்கும் பெண்களை கண்டறிந்து, அவர்களுடைய சமூக சேவையை பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது இலக்கியம் மற்றும் சமுதாய பணியில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் டாக்டர் தமிழ் செம்மல் புலவர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு வழங்கப்பட்டிருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அந்த காலத்திலேயே , மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இரண்டு மன்னர்களுக்கு இடையிலே ஏற்பட்ட போர், அதற்காக தூது போய் போரை நிறுத்தக்கூடிய துணிச்சல் அவ்வைக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். இதில் இருந்து பெண்ணை விடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது, அதுதான் திராவிட இயக்கம். பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியே வா என்று அடைக்கி ஒடுக்கப்பட்ட பெண் இனத்திற்கும் அறைகூவல் விடுத்தது திராவிட இயக்கம்.

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செறுக்குக்கு பெயர் பெற்றுக்கொண்டிருக்கிற சிங்கப் பெண்களாக இந்த இனிய விழாவில் கலந்து கொண்டிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும்போது, திராவிட இயக்கங்களின் பெண்ணுரிமை போராட்டங்களால் விளைந்த பயனை எங்களால் கண்கூடாக இங்கே பார்க்க முடிகிறது. இவர்களது வழித்தடத்தில் திமுக அரசு இன்று ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கல்வி, சமூகநீதி, பெண்ணுரிமை திட்டங்களை அதிக அளவில் திராவிட மாடல் அரசால் நாங்கள் தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். உயர் கல்வியிலும், பள்ளி கல்வியிலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமை திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயத்தின் மேம்பாடு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் நான் 5 கோப்புகளில் கையெழுத்து போட்டேன். அதில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது என்பதும் ஒரு கையெழுத்து என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதை சலுகையாக சொல்லவில்லை, மகளிர் உரிமையாக சொல்கிறேன். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் வகையில் எத்தனையோ திட்டங்கள், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டம் என்ற பெயரை மாற்றி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை என்று இன்று மாற்றி காட்டி இருக்கிறோம். அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் பொருளாதார துறையில் மேம்படுத்தப்பட்டுள்ளனர். கல்வி என்ற நிரந்தர சொத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக 1,83,389 மாணவிகளுக்கு 82.77 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களை அனைத்து வழிகளிலும் முன்னேற்றம் அடைய செய்து வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. பெண்களை விலக்கி வைத்துவிட்டு எதையும் திட்டமிடுவதில்லை.

பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் அண்மையில் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் அவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்தளவுக்கு பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏ பரந்தாமன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை இயக்குநர் ரத்னா மிகிஷி, அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

* பெண் போலீசாருக்கு வாழ்த்து எத்திராஜ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னால், மகளிர் தினத்தையொட்டி பெண் காவலர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட பெண் காவலர்கள் சிலரை இல்லத்துக்கு அழைத்து வாழ்த்துக்களை சொல்லி, பின்னால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இன்றைக்கு காவலர்களாக மட்டுமல்ல, இங்கு வந்து அரங்கத்தில் பார்த்தால், ஐஏஎஸ் அதிகாரிகள் மகளிர் எந்தளவுக்கு இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்த்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகளிர் நாள் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், சமூகத்தில், சிந்தனையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தகைய சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் விதைக்க இது போன்ற மகளிர் தின விழாக்கள் பயன்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: