நடிகையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார்: பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு

மீரட்: நடிகை அர்ச்சனா கவுதமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நடிகையும், தனியார் தொலைகாட்சி போட்டியாளருமான அர்ச்சனா கவுதமின் தந்தை கவுதம் புத்தா என்பவர் மீரட் போலீசில் அளித்த புகாரில், ‘எனது மகளான அர்ச்சனா கவுதம், காங்கிரஸ் ெபாதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை  சந்திக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். ஆனால் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் அவரை சந்திக்க  அனுமதிக்கவில்லை.

நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த பிப். 26ம் தேதி பிரியங்கா காந்தியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்காக எனது மகள் அர்ச்சனா கவுதமை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு அழைத்து செல்வதாகவும் கூறினார். ஆனால் கடைசி நேரத்தில் பிரியங்கா காந்தியை சந்திப்பதற்கான வாய்ப்பை சந்தீப் சிங் ஏற்படுத்தி தரவில்லை. எனது மகளிடம் சந்தீப் சிங் தவறாக நடந்து கொண்டார். எனது மகளுக்கு மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அர்ச்சனா கவுதம் தனது பேஸ்புக் நேரலையில், ‘சந்தீப் சிங்கால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்னை சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டினார். பிரியங்கா காந்தியிடம் பல விசயங்களை சந்தீப் சிங் மறைக்கிறார். அவரை யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை’ என்று குற்றம்சாட்டினார். மீரட் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சந்தீப் சிங் மீது ஐபிசி பிரிவுகள் 504, 506 மற்றும் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: