ஜக்கனாரை ஜெடயலிங்க சுவாமி பூ குண்டம் திருவிழா 8 ஊர் மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்-பராம்பரிய நடனமாடி உற்சாகம்

மஞ்சூர் :  ஜக்கனாரையில் 8 ஊர் சார்பில் ஜெடயசோமி ஹப்பா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஜக்கனாரையில் ஜெடயலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் புகழ் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூ குண்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் நடப்பாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி ஜெடயலிங்க சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. 8 ஊர் தலைவர் சீராளன், பூசாரி அஜ்ஜன், மேலட்டி ஆண்டி, ஊர்கேரி போஜன், கீழ்கேரி குன்னன் மற்றும் ஊர்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மத்தியில் ஜக்கனாரை, அரவேனு, தின்னியூர், முடியகம்பை, தும்பூர், கல்லடா, பெத்தட்டிசேலவை, கேசலாடா ஆகிய 8 ஊர்களில் இருந்து விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் பூ குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினார்கள்.

படுகரின மக்களிடையே பாரம்பரியமாக கொண்டாடப்படும் இவ்விழாவை ‘ஜெடயசோமி ஹப்பா’ என அழைக்கின்றனர். இவ்விழாவில் கிராமங்களில் இருந்து வேலை நிமித்தமாக வௌியூர், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள், திருமணமாகி சென்ற பெண்கள், உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம் என படுகரின மக்கள் தெரிவித்தார்கள்.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் கலாசார நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர், ஊர் தலைவர்கள் மற்றும் 8 ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: