இணையதளத்தில் பான்கார்டு எண்ணை எடுத்து தோனி, அபிஷேக் பச்சன் பெயர்களில் கிரெடிட் கார்டு வாங்கி மெகா மோசடி: ரூ.10 லட்சம் சுருட்டிய டெல்லி கும்பல் சிக்கியது

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், புனேயை தலைமையிடமாக கொண்டு  செயல்படும், ‘பின்டெக்’ என்ற நிறுவனம், ‘ஒன் கார்டு’ என்ற பெயரில் கிரெடிட்  கார்டுகளை வழங்கி வருகிறது. டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் போலி  ஆவணங்களின் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி பணத்தை சுருட்டியதாக, இந்த  நிறுவனம் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அது பற்றி டெல்லி சைபர்  பிரிவு போலீசார் விசாரித்து, 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரின்  பான்கார்டுகளை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள 3 கிரெடிட் கார்டுகளை வாங்கி, இந்த கும்பல் மோசடி செய்துள்ளது.

அவர்களின் பெயர் புனீத், முகமது  ஆசிப், சுனில் குமார், பங்கஜ் மிஷார் மற்றும் விஸ்வ பாஸ்கர் ஷர்மா என  விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள்  பிரபலங்களின் ஜிஎஸ்டி எண்ணை  இணையதளத்தில் இருந்து முதலில் எடுத்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி எண்ணின் முதல் 2  எண்கள், மாநிலத்தை குறிப்பிடுபவை. பின்னால் வரும் மற்ற எண்கள், பான்கார்டு  எண்கள்.  தோனி, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட மேற்கூறிய பிரபலங்களின் ஜிஎஸ்டி  எண்ணை எடுத்த இவர்கள், இவர்களின் பிறந்த தேதியையும் இணையத்தில் இருந்து  எடுத்துள்ளனர். அவற்றை பயன்படுத்தி, போலியாக பான்கார்டு, ஆதார் அட்டையை  வாங்கியுள்ளனர்.

அதாவது, பிறந்த தேதி, பெயர் உள்ளிட்ட எல்லா விவரங்களும்  தோனி உள்ளிட்டோர் உடையதாக இருக்கும். அவற்றில் இவர்களின் புகைப்படத்துக்கு  பதிலாக தங்களின் புகைப்படத்தை இந்த மோசடி கும்பல் பொருத்தி, பான்கார்டு,  ஆதார் கார்டுகளை பெற்றுள்ளது. இந்த போலி பான்கார்டு, ஆதார் எண் மற்றும் இதர ஆதாரங்களை  வைத்து கும்பலை சேர்ந்த 3 பேரும் தலா  ரூ.10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டுகளை பெற்றுள்ளனர். இதை வாங்கிய  கும்பலில் ஒருவர், ஒரே வாரத்தில் ரூ.10 லட்சத்தையும் செலவு செய்துள்ளார்.  

மேலும், மற்ற கிரெடிட் கார்டுகளின் மூலம் ரூ.20 லட்சத்துக்கு செலவு  செய்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை செய்ய முயன்றுள்ளது. இந்த செலவு முழுவதும்  ஒரே கம்ப்யூட்டரை பயன்படுத்தி செய்யவே, பின்டெக் நிறுவனத்துக்கு சந்தேகம்  ஏற்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ரூ.20 லட்சத்தை  காப்பாற்றி விட்டது. இதே போன்ற மோசடிகளை வேறு வங்கி மற்றும் நிதி  நிறுவனங்களில் இந்த கும்பல் செய்துள்ளதா? என போலீசார் விசாரித்து   வருகின்றனர்.

Related Stories: