அதிமுக தோல்வி: ஜெயக்குமார் புது விளக்கம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி இன்று எழுச்சியாக, வேகமாக உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு போலியான வெற்றியை பெற்றுள்ளார்கள். ஆனாலும் கிட்டதட்ட 44 ஆயிரம்  வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எங்களை பொறுத்தவரையில் தோல்விகரமான வெற்றிதான் இது. அவர்களை பொறுத்தவரையில் வெற்றி கிடையாது. எங்களை பொறுத்தவரையில் பார்த்தால் நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். அவர்கள் நினைத்தது அதிமுக டெபாசிட் இழந்துவிடுவோம் என்று.

தற்போது நடந்தது இடைத்தேர்தல். இதில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் நடக்கும் இடங்களில் வாகன சோதனை நடப்பது வழக்கம். நாங்கள் பலமுறை புகார் மனு அளித்தோம். எங்கும் சோதனை நடக்கவில்லை. இந்த வெற்றி எந்த ஒரு தாக்கத்தையும் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தாது. இது மட்டும் உறுதி. அதிமுகவை பொறுத்தவரையில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுவாங்க வேண்டிய எண்ணம் எங்களுக்கு கிடையாது. என்றைக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் அதிமுக. எங்களுக்கு பணநாயத்தின் மீது நம்பிக்கை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: