லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா ராஜினாமா

பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா ராஜினாமா செய்தார். கர்நாடகா பாஜக எம்எல்ஏ மதல் விருபக்சப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. விருபக்சப்பாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக 7 கோடியே 22 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விருபக்சப்பா. இவருடைய மகன் பிரசாந்த். இவர் அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார். பாஜக எம்.எல்.ஏ. விருபக்சப்பா மைசூர் சாண்டல் சோப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். சோப்பு - டிடர்ஜென்ட் துறைக்கு தேவையான ரசாயன பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் டெண்டர் மூலமாக விடப்படுவது வழக்கம்.

இந்த டெண்டர் விடப்படுவதற்காக 81 லட்சம் ரூபாயை குறிப்பிட்ட ஒப்பந்த தாரரிடம் எம்.எல்.ஏ. மகன் பிரசாந்த் லஞ்சமாக கேட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விருபக்சப்பாவின் அலுவலகத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் ரூபாயை ஒப்பந்ததாரர் கொண்டுவந்து எம்.எல்.ஏ. மகன் பிரசாந்திடம் கொடுத்துள்ளார். அச்சமயம் லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்து, திடீரென பாஜக எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், பணம் கைமாறும் நேரத்தில் கையும் களவுமாக பிரசாந்தை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார் ரூ.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரசாந்திற்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. விருபாக்ஷப்பாவுக்கு சொந்தமான இடங்களில் ரூ.7.22 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா ராஜினாமா செய்தார்.

Related Stories: